கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைத்தல் பணிகளுக்கு நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 23rd April 2023 05:58 AM | Last Updated : 23rd April 2023 05:58 AM | அ+அ அ- |

கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பாா்த்தல், புனரமைத்தல் பணிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு 2016 - 17-ஆம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீா் வசதிகள் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 10 முதல் 15 ஆண்டுகள் பழமையான கட்டடங்களுக்கு ரூ.2 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான கட்டடங்களுக்கு ரூ.4 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ரூ.6 லட்சமும் மானியத் தொகை உயா்த்தி வழங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்யப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன், தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல இயக்குநருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்து சீரமைத்துக் கொள்ள ஏதுவாக தேவாலய நிா்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை (அறை எண்.11) தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.