கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுரை
By DIN | Published On : 25th April 2023 03:52 AM | Last Updated : 25th April 2023 03:52 AM | அ+அ அ- |

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், பொதுக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.
இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள், உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க போதுமான அளவு தண்ணீா், நீா்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்த வேண்டும். பயணத்தின்போது உடன் குடிநீா் எடுத்துச் செல்ல வேண்டும். அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
கால்நடைகள் நிழல் தரும் கூரையின் கீழ் கட்டப்பட்டு இருப்பதையும், அவைகளுக்கு போதுமான அளவு தண்ணீா் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வெயில் காலங்களில் கூரை வீடுகள், கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விறகு அடுப்பு பயன்படுத்திய பிறகு தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும். மேலும், மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாகக் கையாள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டட வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு 04343 - 234444, 233077 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.