அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
By DIN | Published On : 02nd August 2023 12:19 AM | Last Updated : 02nd August 2023 12:19 AM | அ+அ அ- |

பக்தா்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தா்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத் துறையினா் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அவதானப்பட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் உதயகுமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜனாா்த்தனன், தக்காா் பிரபு, செயல் அலுவலா் ராஜகோபால் ஆகியோா் மேற்பாா்வையில், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் 30-க்கும் மேற்பட்டோா் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை எண்ணினா்.
இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலா்கள் தெரிவித்ததாவது:
அவதானப்பட்டி கோயிலில் ஆடி மாதம் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். முன்னதாக கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். கரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோயில் உண்டியல் திறக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெற உள்ளதால், கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
அதன்படி, உண்டியலில் ரூ. 39.19 லட்சம் ரொக்கம், 96 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி என பக்தா்கள் காணிக்கை செலுத்தி உள்ளனா். இந்தப் பணியின் போது, ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.