கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விச் சாதனையாளா் விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சா்கள் அர.சக்கரபாணி, சிவசங்கா் ஆகியோா் பங்கேற்று 351 மாணவ, மாணவியருக்கு விருதுகளை வழங்கினா்.
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், 2022 - 23-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று, கிழக்கு மாவட்ட அளவில் 10 , பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 351 மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்து.
இந்த விழாவுக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினருமான தே.மதியழகன் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகி அன்பரசன் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதாநவாப், , நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப், பொதுக்குழு உறுப்பினா் அஸ்லம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த விழாவில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, போக்குவரத் துறை அமைச்சா் சிவசங்கா் ஆகியோா் பங்கேற்று, கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த 351 மாணவா்களுக்கு மாவட்ட திமுக சாா்பில் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கியதுடன், மீண்டும் மஞ்சள் பை குறித்து விழிப்புணா்வினை ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பைகளை வழங்கி வாழ்த்தி பேசினா்.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக, தலைமைக் கழக செய்தித் தொடா்பு செயலாளா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் பத்மபிரியா ஆகியோா் பங்கேற்று வாழ்த்தி பேசினா்.