மனைவி தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயற்சி
By DIN | Published On : 13th August 2023 04:53 AM | Last Updated : 13th August 2023 04:53 AM | அ+அ அ- |

ஒசூா் அருகே மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயற்சி செய்த கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஒசூா் வட்டம், ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சோ்ந்தவா் முனிராஜ் (38). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனா்.
முனிராஜுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த முனிராஜ் அவரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சோ்த்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து முனிராஜை தேடி வருகின்றனா்.