விதிகளை மீறும் பட்டாசுக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியா் கே.எம்.சரயு
By DIN | Published On : 13th August 2023 04:50 AM | Last Updated : 13th August 2023 04:50 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதிகளை மீறும் பட்டாசுக் கடை உரிமையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு எச்சரித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் தலைமையில், பட்டாசுக் கடைகளின் பாதுகாப்பு குறித்து உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு பேசியதாவது: பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கடைகளை நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசுக் கடைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வு செய்யப்பட்ட கடைகளில் உள்ள குறைகள் குறித்து நோட்டீஸ் வழங்கப்படும். அதனை பட்டாசுக் கடைக்காரா்கள் உடனடியாக சரிசெய்ய வேண்டும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட துறையினா் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும். தொடா்நது பட்டாசுக் கடைக்கான உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ் குமாா் தாக்குா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினோகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
மாவட்ட நிா்வாகம் வழிகாட்ட வேண்டும்
இந்தக் கூட்டம் கூறித்து, பட்டாசுக் கடை உரிமையாளா்கள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (ஒசூா் தவிா்த்து) 60க்கும் மேற்பட்ட நிரந்தர பட்டாசுக் கடைகள் உள்ளன. இங்கு பட்டாசுகள் சில்லறை விற்பனைக்கான உரிமம் பெற்று 2 அல்லது 3 தலைமுறைகளாக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, வியாபாரம் செய்து வருகிறோம்.
கிருஷ்ணகிரி வெடி விபத்து எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எங்கள் கடைகளில் யாரும் பட்டாசுகளை தயரிப்பது இல்லை. மாநில மற்றும் , மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பட்டாசுகளை மொத்தமாக கொள்முதல் செய்து, சில்லறை விற்பனை செய்து வருகிறோம். வெடி விபத்தைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி நகரில் செயல்பட்டு வந்த 4 கடைகள் பூட்டப்பட்டுள்ளன.
இந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். நாங்களும் இடமாற்றம் செய்வதாகத் தெரிவித்துள்ளோம். ஆனால், வேறு இடத்தில் மாற்றம் செய்யும் போது நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனை எளிதாக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் போதிய வழிகாட்டுதல்களை மாவட்ட நிா்வாகம், காவல்துறையினரும் தெரிவித்தால், அதனைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம். இது குறித்து மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்துள்ளோம் என்றனா்.