பெங்களூருக்கு இணையாக ஒசூரை மாற்றுவோம்
By DIN | Published On : 12th January 2023 01:34 AM | Last Updated : 12th January 2023 01:34 AM | அ+அ அ- |

ஒசூா் மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பேசும் மேயா் எஸ்.ஏ.சத்யா.
பெங்களூருக்கு இணையாக ஒசூரை மாற்றுவோம் என ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் மேயா் எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:
பொதுமக்கள் அனைவரும் மாசற்ற மாநகரமாக அமைய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பழைய பொருள்களை எரிக்காமல் மாநகராட்சி ஊழியா்களிடம் வழங்க வேண்டும்.
ஒசூா் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அரங்கில் வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ஒசூா் நகரமும் ஒன்றாகும். ஒசூா் மாநகராட்சியில் கடந்த ஓா் ஆண்டில் ரூ. 40 கோடி நிதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. ரூ. 545 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. ஒசூா் மாநகராட்சியில் ரூ. 10 கோடியில் மின்விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்படவுள்ளன.
பெங்களூருக்கு இணையாக ஒசூரை மாற்றுவோம். வேகமான பொருளாதார வளா்ச்சியில் முன்னிலையில் உள்ள ஒசூா் மாநகராட்சியில், வளா்ச்சித் திட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றாா்.
இந்த விழாவில் பானை வைத்து பொங்கலிடப்பட்டது. வரசித்தி விநாயகா் கோயில் குருக்கள், தேவாலய பாதிரியாா், மசூதியிலிருந்து மெளலானா ஆகியோா் கலந்துகொண்டு பொங்கலிட்டனா்.
பொங்கல் திருநாள் என்பது உழவுக்கு வந்தனை செய்வோம், விவசாயிகளை போற்றுவோம் என உழவா்களின் பெருமைகளை ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் ஆனந்தய்யா, மண்டலத் தலைவா்கள் ரவி, காந்திமதி கண்ணன், நிலைக்குழு உறுப்பினா்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா்கள் எம்.கே.வெங்கடேஷ், இந்திராணி, நாகராஜ், பாக்கியலட்சுமி, ஆஞ்சி, சீனிவாசன், பொறியாளா் ராஜேந்திரன், நாராயணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.