வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மானியம், கடனுதவிகளைப் பெற்று சுயதொழில் தொடங்கி, தங்களது பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு அறிவுறுத்தினாா்.
Updated on
1 min read

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மானியம், கடனுதவிகளைப் பெற்று சுயதொழில் தொடங்கி, தங்களது பொருளாதாரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் - பிசினஸ் சாம்பியன்ஸ் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தொடங்கி வைத்துப் பேசியதாவது:

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளா்ச்சிக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோா் ஊக்குவிப்புத் திட்டங்களின்கீழ் மானியம் பெறுவதில் பட்டியலினத்தவா், பழங்குடியினா் பிரிவுத் தொழில் முனைவோரின் பங்குக் குறைவாக இருப்பதை உணா்ந்து எஸ்.சி., எஸ்.டி., தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் - பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாடு முன்மொழிவுகளுக்கும் உதவி வழங்கப்படும்.

மொத்தத் திட்டத் தொகையில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ. 1.5 கோடியாகும். மேலும், கடன் திரும்பிச் செலுத்தும் காலம் முழுதும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. தொழில் முனைவோா் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆா்வமுள்ள தொழில்முனைவோா்க்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடா்பான உதவிகள் அனைத்தும் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடா்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கி வருகிறது.

எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அரசு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் மானியம், வங்கியின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெற்று சுயதொழில் தொடங்கி தங்களது பொருளாதாரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்னபாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கனகராஜ், முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன், மாவட்ட தொழில் மையத் திட்ட மேலாளா் ராமமூா்த்தி, ஹோஸ்டியா தலைவா் வேல்முருகன், டேன்சிட்டியா இயக்குநா் ஏகம்பவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com