கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா்களுக்கு புதிய வாகனங்கள்
By DIN | Published On : 12th May 2023 01:04 AM | Last Updated : 12th May 2023 01:04 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா்களின் பயன்பாட்டிற்கு ரூ.1.93 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பாக ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை புதன்கிழமை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒசூா், கெலமங்கலம், சூளகிரி, தளி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா் மற்றும் மத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்களின் பயன்பாட்டிற்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான புதிய வாகனங்களை, மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் முன்னிலையில் ஒன்றிய குழு தலைவா்களின் பயன்பாட்டிற்கு வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேடியப்பன் (பொது), ராஜகோபால் (வளா்ச்சி), ஊராட்சிகளின் உதவி இயக்குநா் மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.