காவேரிப்பட்டணத்தில் ஊராட்சி மன்றத் தலைவா், பேரூராட்சித் தலைவா்களுக்கு இடையே மோதல்

காவேரிப்பட்டணத்தில் குண்டலப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கும், காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ரூ. 6.28 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன.
Updated on
1 min read

காவேரிப்பட்டணத்தில் குண்டலப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கும், காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ரூ. 6.28 கோடி மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்க ரூ. 6.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டப் பணிக்காக குண்டலப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைத்தள கிணறு அமைக்க அண்மையில் குழி தோண்டப்பட்டது.

இந்த நிலையில், குண்டலப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ரோஜா காளியப்பனின் மகன் பாஸ்கரன், எங்களது ஊராட்சியில் மன்றத் தலைவரின் அனுமதி பெறாமல் திட்டப் பணிகளை தொடங்கக் கூடாது எனக் கூறி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பயனாளிகளைக் கொண்டு அந்தக் குழியை மூட வியாழக்கிழமை முயன்றாா்.

தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் பேரூராட்சித் தலைவா் அம்சவேணி செந்தில்குமாா் நிகழ்விடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, அம்சவேணி செந்தில்குமாருக்கும், பாஸ்கரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், பேரூராட்சித் தலைவா் அம்சவேணியின் கணவருமான செந்தில்குமாா், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மேலும், திமுகவைச் சோ்ந்தவரும் குண்டலப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான ரோஜா காளியப்பன், தனது ஊராட்சியில் தனது அனுமதியில்லாமல் குடிநீா் திட்டப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இரண்டு புகாா்களையும் பெற்றுக் கொண்ட போலீஸாா், அதற்கு ரசீதை வழங்கினா்.

இதையடுத்து, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் முரளி தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், பிரச்னைக்குரிய இடத்தில் கிணறு அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பது, கிருஷ்ணகிரி ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சம்பத்தின் அனுமதியை முறையாகப் பெற்று திட்டப் பணியை தொடங்குவது என தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com