ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு கைது:தமிழகம் - ஆந்திரம் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
By DIN | Published On : 10th September 2023 01:28 AM | Last Updated : 10th September 2023 01:28 AM | அ+அ அ- |

ஆந்திர மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழகம் - ஆந்திரம் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், அந்த மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து அவரது ஆதரவாளா்கள், தெலுங்கு தேசம் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதனால், ஆந்திர மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக - ஆந்திர மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநிலம், குப்பம், சித்தூா், திருப்பதி, திருமலை போன்ற ஊா்களுக்குச் செல்லும் ஆந்திர, தமிழக மாநிலங்களின் அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
தமிழகப் பேருந்துகள், ஆந்திர மாநில எல்லையான காளி கோயில் வரை இயக்கப்பட்டன. அங்கிருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிராமங்களுக்கு ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு வழக்கமாக இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால், மாணவா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள், பக்தா்கள் பாதிக்கப்பட்டனா்.
பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, பால் போன்ற பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல இயங்கின. ஆந்திரம் - தமிழக எல்லையான காளி கோயில் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.