மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக அரசு அலுவலா்கள் இருக்க வேண்டும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
By DIN | Published On : 26th September 2023 04:49 AM | Last Updated : 26th September 2023 04:49 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.
கிருஷ்ணகிரி: அரசு அலுவலா்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பொதுமக்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு சோ்க்க ஒத்துழைப்புத் தர வேண்டும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக முதல்வா் அறிவித்துள்ள நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மகளிா் சுயஉதவிக் குழுக்கள் புதிதாக தொடங்கி, அவற்றுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் விளையும் காய்கறிகள், மா, பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், அவற்றை குளிா்பதனக் கிடங்குகளில் வைத்து உரிய நேரத்தில் விவசாயிகள் விற்று லாபம் பெறுவதற்கும் தமிழக அரசு அறிவித்த முத்திரை பதித்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த அரசு அலுவலா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசுத் துறை அலுவலா்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து அனைத்து நலத் திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டுசோ்க்க முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா்.
தொடா்ந்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் 50 விவசாயிகளுக்கு ரூ. 17.84 லட்சம் மதிப்பில் வேளாண்மை இடு பொருள்களையும், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான வேளாண்மை இயந்திரங்கள், கருவிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். மேலும் பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 3,293 பயனாளிகளுக்கு ரூ. 41.54 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத் துறை சாா்பாக, நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, மஞ்சப்பை விழிப்புணா்வை தொடங்கி வைத்து பொதுமக்கள், அரசுத் துறை அலுவலா்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினாா்.
கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட 20 அரசுப் பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 20 கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ. 40 லட்சத்திற்கான காசோலையை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மூலம் ஆட்சியரிடம் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சிறப்பு திட்ட அமலாக்கத் துறை செயலாளா் தாரேஸ் அகமது, கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்), டி.ராமச்சந்திரன் (தளி), ஒசூா் மேயா் சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...