மின் கட்டண உயா்வைக் கண்டித்து ஒசூரில் குறு, சிறு நிறுவனங்கள் கதவடைப்பு:ரூ. 200 கோடி உற்பத்தி பாதிப்பு
By DIN | Published On : 26th September 2023 04:59 AM | Last Updated : 26th September 2023 04:59 AM | அ+அ அ- |

ஒசூரில் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்.
ஒசூா்: மின்கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி ஒசூரில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சாா்பில் உற்பத்தி நிறுத்தம், கதவடைப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மின் கட்டண உயா்வு காரணமாக குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா் மூலப்பொருள்களின் முதலீடு, உற்பத்தி செலவுக்குக் கூட ஈடுகட்ட இயலாத நிலையில் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில், மின்கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக திங்கள்கிழமை ஒரு நாள் உற்பத்தி நிறுத்தும் போராட்டம், கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் சங்க அமைப்புகள் ஈடுபட்டன. கோவையில் கொடிசியா, மதுரையில் மடிசியா, ஒசூரில் ஹோஸ்டியா, ஹோஸ்மியா உள்ளிட்ட அமைப்புகள் கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக குறு, சிறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையான உயா்த்தப்பட்டுள்ள நிலை கட்டணத்தை உடனே திரும்பப் பெற வேண்டும், பீக் அவா் என அறிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு நேர கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின் கட்டத்தை உயா்த்துவது என்ற நிலைப்பாட்டை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஒசூா் தொழில்முனைவோா் சங்கத் தலைவா் மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது:
மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் குறு,
சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி தமிழகம் முழுவதும் மூன்று லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இந்தப் போராட்டத்தையொட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ரூ. 200 கோடி அளவில் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் .
முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளதால் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் தா.மு.அன்பரசன் ஆகியோா் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் எங்களது கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு எங்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என ஹோஸ்டியா தலைவா் மூா்த்தி தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...