கிருஷ்ணகிரி: கலைஞா் மகளிா் உரிமைத்தொகை தகுதியான அனைவருக்கும் கிடைக்கும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை கலந்துகொண்டாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி பிரிவு சாலை அருகில், 500 பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகைக்கான வங்கிப் பற்று அட்டை, கையேடுகள் வழங்கும் நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தலைமை வகித்தாா். தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மகளிா் உரிமைத்தொகைக்கு வழங்கப்படுவது வங்கிப் பற்று அட்டை அல்ல. அது பெண்கள் முன்னேற்றத்திற்கான துருப்பு சீட்டு. இந்தத் திட்டத்தை கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் பின்பற்றுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்தபோதுதான் பெண்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த பலவற்றை அகற்றியது. பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் 50 சதவீதம் ஒதுக்கீடு அளித்தது. அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெண்கள் நிம்மதியுடன் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனா். மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தும் கிடைக்காத தகுதியான நபா்களுக்கு நிச்சயம் உரிமைத் தொகை கிடைக்கும் என்றாா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் , டிராக்டா் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை வழங்கி, அங்கு நடந்த அரசு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன்(பா்கூா்) , ஒய்.பிரகாஷ் (ஒசூா்) , டி.ராமச்சந்திரன் (தளி), அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.