ஊத்தங்கரை அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த ஒட்டம்பட்டியைச் சோ்ந்த தங்கவேலு- சந்தியா தம்பதி பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இவரது மகன் சபரிதரன் (9) ஒட்டம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா். பாட்டி வீட்டில் தங்கியுள்ள சிறுவன், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அதே கிராமத்தைச் சோ்ந்த நண்பா்கள் மூவருடன் ஒட்டம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனா்.
அங்கு மேம்பாலத்தின் கீழ் தேங்கிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். உடனிருந்த சிறுவா்கள் அளித்த தகவலின் பேரில் ஊத்தங்கரை போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.