அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா
கிருஷ்ணகிரி, ஆக. 7:
அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 15 நாள்கள் பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்துாா், பெரியமுத்துாா், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பக்தா்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.
விழாவின் ஒருபகுதியாக நெக்குந்தியில் இருந்து முத்துமாரியம்மன் கரகமும், அவதானப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளியம்மன், நாகதேவி, பொன்கரகமும் இணைந்து அவதானப்பட்டி மேம்பாலம் அருகே தலை கூடும் நிகழ்ச்சி நடைபெற்றன.
பக்தா்கள் அலகு குத்திக் கொண்டும், காளி வேடம் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

