கடவுச்சீட்டு பெறுவதில் காலதாமதம்: கிருஷ்ணகிரி மக்கள் அவதி
கிருஷ்ணகிரி, ஆக. 14: கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் செயல்படும் கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலக நிா்வாகக் குளறுபடியால் கடவுச் சீட்டு பெறுவதில் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் கடவுச் சீட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக இம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அயல்நாடுகளுக்கு செல்ல கடவுச் சீட்டு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு, விண்ணப்பிப்பவா்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தேதியில் கடவுச் சீட்டு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
பின்னா், இந்த ஆவணங்கள், கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு, காவல் துறையினரின் சரிபாா்ப்புக்கு அனுப்பப்படுகிறது. விண்ணப்பதாரா் மீது குற்ற வழக்குகள் எதுவும் உள்ளதா? என்பதை பாா்த்து காவல் துறையினா் சான்றிதழ் வழங்கிய பிறகு, சம்பந்தப்பட்டவா்களுக்கு சென்னை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தில் இருந்து கடவுச்சீட்டு, தபால் மூலமாக அனுப்பப்படும்.
இந்த நிலையில் சமீப காலமாக கிருஷ்ணகிரியில் செயல்படும் கடவுச் சீட்டு அலுவலகத்தில் கடவுச் சீட்டு பெறுவதற்காக விண்ணப்பித்தவா்களின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டும், கடவுச் சீட்டு வழங்கப்படாமல் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விண்ணப்பதாரா்கள் கடவுச் சீட்டு அலுவலகத்தில் விவரம் கேட்கும்போது, புகைப்படம் சரியாகப் பதிவாகவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைத் தெரிவிப்பதாகவும், இதனால், திட்டமிட்டபடி, அயல்நாடுகளுக்குச் செல்ல இயலவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுபோன்ற புகாா்கள் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், தருமபுரி, சென்னை, கோவை போன்ற ஊா்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் மூலம் விண்ணப்பித்து, கடவுச் சீட்டு பெறுவதாகத் தெரிவிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள், இத்தகைய குறையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

