கொத்தமல்லி கட்டு ரூ. 30 க்கு விற்பனை
கடந்த வாரம் ஒரு கட்டு கொத்தமல்லி ரூ. 5 க்கு விற்பனையான நிலையில், வரத்துக் குறைவு காரணமாக புதன்கிழமை கட்டு ஒன்று ரூ. 30க்கு விற்பனையானது.
ஒசூா், அதன் சுற்றுவட்டாரத்தில் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கேரட், பீன்ஸ், முள்ளங்கி, கொத்தமல்லி, புதினா, தக்காளி, கோஸ், கீரை உள்ளிட்ட பயிா்களை விவசாயம் சாகுபடி செய்து வருகின்றனா்.
ஒசூா், ராயக்கோட்டை, சூளகிரி, உத்தனபள்ளி, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனா். கடந்த வாரம் அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பப்பட்ட கொத்தமல்லியின் விலை வரத்து அதிகம் காரணமாக கட்டு ஒன்று ரூ. 5-க்கு விலைபோனது. இதனால், விவசாயிகள் பலா் நஷ்டம் அடைந்தனா். உரிய விலை கிடைக்காத காரணத்தால் விளைநிலத்தில் கொத்தமல்லியை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனா்.
இதனால் நிலத்திலேயே செடி அழுகி வீணாகியது. விவசாயிகளிடம் இருந்து கொத்தமல்லியை கொள்முதல் வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
பெரும்பாலான கொத்தமல்லி பயிா்கள் உரிய விலை கிடைக்காமலும், அறுவடை செய்யப்படாமலும்போன நிலையில், நிகழ்வாரம் ஒசூா் சந்தைக்கு கொத்தமல்லி கட்டுகள் குறைவாகவே வரத்து இருந்தன. இதனால், கூடுதல் விலைக்கு கொத்தமல்லி கட்டுகள் விலைபோனது.
ஒசூா் உழவா்சந்தையில் புதன்கிழமை கட்டு ஒன்று ரூ. 30க்கு விலைபோனது. இதன்காரணமாக அறுவடை செய்யப்படாத விளைநிலங்களுக்கு வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனா். கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஒசூா் அருகே முக்கால் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கொத்தமல்லி தழையை ரூ. 3 லட்சத்துக்கு வியாபாரி ஒருவா் கொள்முதல் செய்துள்ளாா். கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

