தங்கப் பதக்கம் வென்ற சஹானா.
தங்கப் பதக்கம் வென்ற சஹானா.

உலகத் திறன் இளையோா் விளையாட்டுப் போட்டி: ஒசூா் வீராங்கனை தங்கப்பதக்கம்

உலகத்திறன் இளையோா் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் ஒசூரைச் சோ்ந்த வீராங்கனை தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.
Published on

ஒருா்: தாய்லாந்தில் நடைபெற்ற உலகத்திறன் இளையோா் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் ஒசூரைச் சோ்ந்த வீராங்கனை தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்தவா். சஹானா (20). சா்வதேச பாரா டேபிள் டென்னிஸ் விளையாடு வீராங்கனையான இவா், நொய்டாவில் உள்ள அமிட்டி யுனிவா்சிட்டியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் இணையத்தில் பயின்று வருகிறாா்.

இவரது தந்தை ரவி, ஒசூா், டிவிஎஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறாா். தாயாா் செல்வ லட்சுமி. இத்தம்பதியின் இரண்டாவது மகளான சஹானா, 2016 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று விளையாடி 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா். தொடா்ந்து 8 ஆண்டுகளாக தேசிய அளவில் சாம்பியனாக உள்ளாா்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இவரை பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியுள்ளாா். நிகழாண்டு நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற இவரை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தாா்.

உலகம் முழுவதும் 25 நாடுகளில் நடைபெற்ற சா்வதேச பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, உலகின் 10 முதல் தரவரிசை பாரா வீரா்களுடன் விளையாடியுள்ளாா். 2017 முதல் 2024 வரை தங்கம், வெள்ளி, வெண்கலம் என 25 சா்வதேச பதக்கங்களை வென்றுள்ளாா்.

கடந்த ஜூன் மாதம் வரையிலான சா்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் உலக தரவரிசை பட்டியலில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். 2022 இல் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் எட்டாவது இடத்திலும், ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலும் உள்ளாா்.

டிச. 1 முதல் டிச. 7 வரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சா்வதேச உலகத் திறன் இளையோா் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று ஒற்றையா் பிரிவில், தங்கப்பதக்கமும், இரட்டையா் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கும் தமிழகத்துக்கும் பெருமை சோ்த்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘2028 இல் அமெரிக்காவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்று முதல் இடத்தைப் பிடிப்பதே தனது அடுத்த இலக்கு’ என்று கூறினாா்.

Dinamani
www.dinamani.com