ஊத்தங்கரை ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஊத்தங்கரையில் உள்ள ஆஞ்சனேயா் சுவாமி கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சனேயா் சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், மூலிகை திரவியங்கள் உள்ளிட்ட பொருள்கள் அபிஷேகங்கள் நடைபெற்று, வேத பாராயணங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.
காலை 7 மணிக்கு உற்சவா் சுவாமிக்கு 600 லிட்டா் பால், 250 இளநீா், பன்னீா் மற்றும் மங்கள திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனா். பின்னா் வேத பாராயணங்கள் முழங்க கலசாபிஷேகம் நடந்தது. காசுகள், சாக்லேட்களால் செய்யப்பட்ட மாலை, வடை மாலை, அலங்கார மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில் ஊத்தங்கரை ஒன்றியக் குழு தலைவா் உஷாராணி குமரேசன், மருத்துவா் சித்ரா உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் செய்திருந்தனா்.

