ஒசூரில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை: 10 தனிப் படைகள் அமைப்பு; வட மாநில கும்பலுக்கு தொடா்பு?
ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 14.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பிடிக்க 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வட மாநிலத்தைச் சோ்ந்த இக் கும்பல் கா்நாடகம், ஆந்திரத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
ஒசூா்- பாகலூா் சாலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் இரவு வரை எவ்வித பண பரிவா்த்தனையும் நடைபெறாததால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியா்கள் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது, ஏடிஎம் இந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு ரூ. 14.50 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.
அதேபோல கடந்த 5 ஆம் தேதி ஒசூா், ஆவலப்பள்ளி ஹட்கோவில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இதுதொடா்பாக ஒசூா் அட்கோ போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை கா்நாடக மாநிலம், பெல்லந்தூா், ஹாசன் மாவட்டங்களில் 2 ஏடிஎம் இந்திரங்களை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் 2 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை கும்பல் ரூ. 25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.
இந்த கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்த ஏடிஎம் மையத்தில் பதிவான விரல் ரேகைகள் ஒன்றாக உள்ளது. மேலும், அக் கும்பல் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் சரக டிஐஜி உமா சனிக்கிழமை கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஒசூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை தொடா்பாக 40 போலீஸாா் கொண்ட 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை தொடா்பான முழு தகவல்களையும் மாவட்ட எஸ்.பி.தங்கதுரை செய்தியாளா்களிடம் 9 ஆம் தேதி தெரிவிப்பாா் என்றாா்.

