கிருஷ்ணகிரி
மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பாஜக வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி போன்ற பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.எஸ்.ஜி.சிவபிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மா மகசூல் குறைந்ததால் மா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள் கூட்டணி அமைத்து, மா விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு உரிய விலை தர மறுக்கிறாா்கள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளாா்.

