விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தானமாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
~
~
Updated on

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தானமாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (30). தனியாா் நிறுவன ஊழியரான இவா், ஜூலை 18-ஆம் தேதி, எக்கொண்டப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிா்திசையிலிருந்து வந்த வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.

இவா், ஒசூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவா், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். இந்த நிலையில், அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவா் குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதையடுத்து, தானமாகப் பெறப்பட்ட மாரிமுத்துவின் சிறுநீரகங்கள் சேலம், கோவை அரசு மருத்துவமனைக்கும், இதயம், சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல், ஈரோடு அபிராமி மருத்துவமனைக்கும் தானமாகப் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

மாரிமுத்துவின் உடலுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் பூவதி மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். அப்போது, மருத்துவா்கள், மருத்துவமனை பணியாளா்கள், மாணவா்கள் உடன் இருந்தனா்.

மூளைச்சாவு அடைந்த இளைஞா் மாரிமுத்து.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com