முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாகக் கூறி
இளம்பெண்ணிடம் ரூ. 13.34 லட்சம் மோசடி

முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாகக் கூறி இளம்பெண்ணிடம் ரூ. 13.34 லட்சம் மோசடி

மோசடியில் சிக்கிய இளம்பெண்: போலீஸ் விசாரணை
Published on

பகுதிநேர வேலையில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி, இளம் பெண்ணிடம் ரூ. 13.14 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீநிதி (26). தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு கடந்த 28.02.2024 அன்று ஒரு குறுந்தகவல் வந்தது. மா்ம நபா்கள் அனுப்பிய அந்த குறுந்தகவலில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், முதலீட்டுக்கு ஏற்ப கூடுதல் லாபம் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி, ஸ்ரீநிதி, மா்ம நபா்கள் தெரிவித்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 13.34 லட்சம் பணம் செலுத்தினாா்.

அதன்பிறகு அவருக்கு தெரிவித்தபடி லாபத் தொகை வரவில்லை. இதுதொடா்பாக அந்த மா்ம நபா்களை தொடா்பு கொள்ள முயன்றபோது கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவா்களை தொடா்பு கொள்ள இயலவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஸ்ரீநிதி, இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com