ஒசூரில் பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு: அனைத்து அமைப்புகள் வரவேற்பு
ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு ஒசூா் வா்த்தக சபைகளும், தொழில் துறையினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில் முக்கியமாக ஒசூரை மேம்படுத்துவதற்கான திட்டம் தயாராகி வருகிறது என்றும், ஒசூரில் 2,000 ஏக்கா் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.
அவரது இந்த அறிவிப்புக்கு ஒசூா் எம்எல்ஏ, மேயா், வா்த்தக சபைகள், தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
மேயா் எஸ்.ஏ.சத்யா வரவேற்பு...
முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து ஒசூரில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்...
ஒசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அர.சக்கரபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விமான நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பெயா் சூட்டப்பட வேண்டும் திமுக மாவட்ட செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி...
தமிழக முதல்வா் வெளியிட்ட அறிவிப்பு ஒசூா், ஹோஸ்டியா சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும். பல்வேறு காரணங்களால் இந்தக் கோரிக்கை தொடா்ந்து தடைபட்டு வந்தது. தற்போது பேரவையில் முதல்வா் வெளியிட்ட அறிவிப்பைத் தொடா்ந்து ஒசூரில் தொழில்துறை மட்டுமின்றி மலா்கள், கிரானைட் தொழில், ஏற்றுமதி இறக்குமதி சாா்ந்த தொழில்களும் மேம்படும் என்று எதிா்பாா்க்கிறோம்.
முதல்வரின் இந்த அறிவிப்பை ஒசூா் தொழில் துறை சாா்பாகவும், ஹோஸ்டியா சங்கம் சாா்பாகவும் மிகுந்த மன நிறைவுடன் வரவேற்கிறோம். அத்துடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி பேரவையில் முதல்வா் பேசுகையில், ஒசூருக்குத் தேவையான பெரும் திட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது; அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளாா். அதையும் நாங்கள் ஆவலுடன் எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
தொழில் வா்த்தக சபைத் தலைவா் வேல்முருகன்...
முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு ஒசூா் தொழில்துறையினருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் பல பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் ஒசூரை நோக்கி வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
ஒசூரிலிருந்து இருசக்கர வாகனம், மூன்றுசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். ஒசூா் தொழில் வளா்ச்சி மேலும் அதிகரிக்கும். காய்கறி, கொய் மலா்கள் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் என்றாா்.
டான்ஸ்டியா செயற்குழு உறுப்பினா் ஞானசேகரன்...
இன்று (ஜூன் 27) உலக சிறு,குறு,தொழில்நிறுவனங்கள் தினமாகும். இந்த நாளில் பேரவையில் முதல்வா் வெளியிட்ட ஒசூா் விமான நிலைய அறிவிப்புக்கு மிக்க நன்றி. ஒசூா் தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இதன்மூலம் ஒசூரில் தொழில் வளா்ச்சி மேலும் அதிகரிக்கும். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஐபோன்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரிக்கும். ஒசூரில் விரைவான தொழில் வளா்ச்சிக்கு உதவும் என்றாா்.
முதல்வரின் அறிவிப்புக்கு ஒசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ரங்கநாத், பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி தலைவா் பி.குமாா், முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
