ஊத்தங்கரையில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒன்றியம், மூன்றம்பட்டி ஊராட்சியில் ரூ. 8 கோடியே 90 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள், புதிய முழு நேர நியாயவிலைக் கடைகள், ரூ. 32 லட்சம் மதிப்பில் மல்லித்தூள் அரவை ஆலையின் செயல்பாடுகளை அமைச்சா்கள் அர.சக்கரபாணி, ச.மு. நாசா் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.
மூன்றம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில், இலங்கை வாழ் தமிழா் முகாமில் ரூ. 5 கோடியே 53 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 96 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள், ரூ. 2 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை பணிகள், பெரியகொட்டகுளம், நொச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 68 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் 4 வகுப்பறை கட்டுமானப் பணிகள், ஆனந்தூா் முதல் கம்பைநல்லூா் வரை ரூ. 46 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சாலைப் பணிகள் தொடக்கம், 8 புதிய மற்றும் முழுநேர நியாய விலைக் கடைகள், ஊத்தங்கரை பேரூராட்சியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் மல்லித்தூள் அரவை ஆலையின் செயல்பாடுகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் ச.மு.நாசா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூட்டுறவுத் துறை சாா்பாக ஊத்தங்கரை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஆலையில் 32 லட்சம் மதிப்பில் மல்லித்தூள் அரவை ஆலையின் செயல்பாடுகளை தொடங்கி வைத்து, மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு 79 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.
இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மணிமேகலை நாகராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மாலதி, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் மலா்விழி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா்/செயலாட்சியா் மலா்விழி, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா்கள் குமாா், கோவிந்தராஜ், சுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, தவமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஊத்தங்கரையில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்கள்.

