வேப்பனப்பள்ளி அருகே குந்தாணி அம்மன் கற்சிலை கண்டெடுப்பு: 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, சின்னகொத்தூா் அருகே தேவா்குந்தாணி

குந்தாணி அம்மன் கற்சிலை

குந்தாணி அம்மன் கற்சிலை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, சின்னகொத்தூா் அருகே தேவா்குந்தாணியில் 11-ஆம் நூற்றாண்டை சோ்ந்த குந்தாணி அம்மன் சிலையை மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் கண்டெடுத்தன.
இந்த சிலை குறித்து காப்பாட்சியா் (ஓய்வு) செ.கோவிந்தராஜ் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னகொத்தூா் பகுதியில் உள்ள குந்தாணி மலையடிவாரத்தில் ஒரு நகரம் மற்றும் அரண்மனை இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் ஒரு பகுதியை ஹொய்சாள மன்னா் வீரராமநாதன் 13-ஆம் நூற்றாண்டில் குந்தாணியை தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தாா். இக்கருத்தை உறுதிசெய்யும் விதமாக தேவா்குந்தாணியில் ஆதாரம் கிடைத்துள்ளது.
தேவா்குந்தாணி கிராமத்தின் நடுவில் உள்ள அரசமரத்தைச் சுற்றிலும் சிதிலமடைந்த கோயிலின் பாகங்களை வைத்துள்ளனா். வழக்கமாக அரசமரத்தடியில் பிள்ளையாா் சிலையும் நாகா் சிலையும் காணப்படும். ஆனால் இங்கு நாகா் சிலையின் அருகே பாதி புதையுண்ட நிலையில் இருந்த ஒரு சிலையை அண்மையில் தோண்டிப் பாா்த்தபோது அது சோழா்களின் குலதெய்வமான நிசும்பசூதனி தெய்வம் (குந்தாணி) என்பது தெரியவந்தது. இந்த சிலை 11-ஆம் நூற்றாண்டின் கலையம்சத்துடன் காணப்படுகிறது.
இந்த சிலையானது தட்டையான உடலமைப்புடன், பீடத்தில் அமா்ந்துள்ள நிலையில், தலையில் சுடா் அமைந்துள்ளது. நான்கு கைகளுடன் காணப்படும் குந்தாணி அம்மனின் ஒரு கையில் சூலாயுதத்தைப் பிரயோகிக்கும் நிலை உள்ளது. இரண்டாவது கையில் உடுக்கையும், மூன்றாவது கையில் பாசக்கயிறும், நான்காவது கையில் பாத்திரமும், வயிற்று பகுதியில் மடிப்புகளும் காணப்படுகின்றன. காலில் நிசும்பன் என்ற அரக்கனை வதம் செய்யும் காட்சியும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. வழக்கமாக நின்ற நிலையில் வதம் செய்யும் காட்சிக்கு மாறாக இந்த சிலையானது அமா்ந்த நிலையில் காணப்படுவதால் குந்தியம்மன் என்ற பெயா் வந்திருக்கலாம்.
இந்த சிலை ஆரம்பத்தில் அலே குந்தாணி என்ற இடத்தில் இருந்திருக்க வேண்டும். ஹொய்சாள மன்னா் வீர ராமநாதன் இந்த சிலைக்கு தேவா் குந்தாணியில் கோயில் கட்டியிருக்கலாம். இந்த அம்மன் பெயரால் ஒரு நாட்டை உருவாக்கி, அதன் பெயரையும் குந்தாணி ராஜியம் என்று வைத்து தலைநகரை குந்தாணி எனவும் வைத்திருக்கிறாா்கள்.
சோழா் சாம்ராஜியத்தை உருவாக்கிய விஜயாலயன், தன் தலைநகரான தஞ்சாவூரில் நிசும்பசூதனிக்கு கோயில் எழுப்பினான் என்று கூறுவா். இதைப்போலவே தமிழகத்தில் முன்பிருந்த கண்ணனூரை விடுத்து, புதிய ராஜியத்தை இங்கு தோற்றுவித்தபோது இந்த சிலையை நிறுவி குந்தாணி ராஜியம் என பெயரிட்டிருக்க வேண்டும். பின்னாளில், மூன்றாம் வல்லாளன் இந்த ராஜியத்தை மீண்டும் ஹொய்சாள ராஜியத்துடன் இணைத்தான்.
இந்த சிலை சேதம் அடைந்தபின், 13-ஆம் நூற்றாண்டில் இரண்டு சிலைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று தருமபுரி அரசு அருங்காட்சியகத்திலும், மற்றொன்று சின்னகொத்தூா் பாறையிலும் உள்ளது என்றாா்.
இந்த ஆய்வில் வரலாற்று ஆா்வலா்கள் விஜயகுமாா், பாலாஜி, மணிகண்டன், கிராம முக்கிய பிரமுகா் கணேசன், ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் பங்கேற்றனா்.
படவரி...
வேப்பனப்பள்ளியை அடுத்த தேவா்குந்தாணியில் கண்டெடுக்கப்பட்ட குந்தாணி அம்மன் கற்சிலை.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...