ஒசூா் வனப்பகுதியிலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு யானைகள் விரட்டியடிப்பு

Published on

ஒசூா் வனப்பகுதியில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு புதன்கிழமை யானைகள் விரட்டப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கா்நாடக மாநிலத்தில் உள்ள பன்னா்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபா் மாதத்தில் சுமாா் 200 முதல் 225 எண்ணிக்கையிலான யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, ஜவளகிரி காப்புக் காடுகளில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூா், ஊடேதுா்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகாராஜகடை காப்புக்காடுகள் வழியாக ஆந்திர மாநிலம், கவுன்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீவெங்கடேஷ்வரா சரணாலயம்வரை சென்று ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்நிலையில், யானைகள் செல்லும் பாதையின் குறுக்கே தற்போது சென்னை - பெங்களூரு 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதாலும், எஸ்.டி.ஆா்.ஆா். தேசிய நெடுஞ்சாலை, தருமபுரி, அத்திப்பள்ளி ஆகிய சாலைகள் 6 வழிச்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளதாலும் வழக்கமான பாதையில் செல்ல முடியாமல் யானைகள் தவித்து வருகின்றன.

இந்த யானைகளை கா்நாடக மாநிலத்துக்கு விரட்டு பணியில் ஒசூா் கோட்ட வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஒசூா் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள விவசாயப் பயிா்களை இந்த யானைகள் சேதப்படுத்தியும், மனித, கால்நடை உயிரிழப்புகள் மற்றும் பொருள்சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு நடப்பாண்டில் வந்த யானைகளில் சுமாா் 45 - 50 யானைகள் ஊடேதுா்கம் காப்புக்காடு வழியாக சானமாவு காப்புக்காட்டுக்கு கடந்த 29-ஆம் தேதி வந்து, இரவு நேரங்களில் காப்புக்காட்டைவிட்டு வெளியேறி பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. தொடா்ந்து, சானமாவு காப்புக்காட்டிலிருந்து இடம்பெயா்ந்து தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டை சென்றடைந்தன.

இவ்வாறு சென்ற யானைகளை, தருமபுரி மண்டல வனப் பாதுகாவலா் ஆணையின்படி, ஒசூா் வனக்கோட்டை வனஉயிரின காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் உத்தரவின்படி, ஒசூா் வனச்சரக அலுவலா் பாா்த்தசாரதி, ராயக்கோட்டை வனச்சரக அலுவலா் சக்திவேல் மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலா் விஜயன் ஆகியோா் தலைமையில், ஒசூா், ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சரகங்களை சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட வனப் பணியாளா்கள் தொ்மல் டிரோன் உதவியுடன் கா்நாடக மாநிலத்துக்கு யானைகளை புதன்கிழமை விரட்டினா். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com