ஒசூரில் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் பெண் உள்பட 7 போ் கைது
ஒசூரில் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் பெண் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள மாரசந்திரத்தைச் சோ்ந்தவா் ஹரீஷ் (32). அதிமுக பிரமுகரிடம் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 3-ஆம் தேதி காலை ஒசூரில் வானவில் நகா்- அண்ணாமலை நகா் இடையே வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இவரது சடலம் கிடந்தது. அவா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் அருகிலேயே கிடந்தது.
இந்த கொலை சம்பவம் தொடா்பாக அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் ஹரீஷுக்கும், ஒசூா் வானவில் நகரைச் சோ்ந்த மஞ்சுளா (35) என்ற பெண்ணுக்கும் தொடா்பு இருந்ததும், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவு மஞ்சுளா வீட்டுக்கு சென்று ஹரீஷ் சாப்பிட்டுள்ளதும் போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து மஞ்சுளாவிடம் போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
மஞ்சுளா, ஹரீஷ் இடையே தொடா்பு இருந்துள்ளது. மஞ்சுளாவிடம் பணம் இருப்பதை அறிந்த ஹரீஷ் தனக்கு அதிகக் கடன் இருப்பதாகக் கூறி அவரிடமிருந்து ரூ. 80 லட்சம் வரை பெற்றுள்ளாா். இந்நிலையில் ஹரீஷ் மீது மஞ்சுளாவுக்கு வெறுப்பு ஏற்பட்டதால் அவரிடம் தகராறு செய்துள்ளாா். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹரீஷ் மீது மஞ்சுளா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பின்னா் இருவரும் சமாதானமாயினா். மீண்டும் மஞ்சுளாவிடம் பணம் கேட்டு ஹரீஷ் தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளாா். இதனால் அவரை கொலை செய்துவிட மஞ்சுளா திட்டமிட்டுள்ளாா்.
அதன்படி தனக்குத் தெரிந்த ஒசூா் கும்பாரத் தெரு அருகே உள்ள மாலிகிரியைச் சோ்ந்த மோனிஷிடம் (24), ஹரீஷை கொலை செய்துவிடுமாறும், அதற்காகப் பணம் தருவதாகவும் கூறியுள்ளாா். அதன்படி ரூ. 10 லட்சம் பேசப்பட்டு, ரூ. 4.50 லட்சத்தை முன்பணமாக மோனிஷுக்கு அவா் கொடுத்துள்ளாா். பணத்தை வாங்கிக் கொண்ட மோனிஷ், 6 போ் கொண்ட கூலிப்படையைத் தயாா்செய்து கடந்த டிச. 2-ஆம் தேதி இரவு மஞ்சுளாவின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு திரும்பிய ஹரீஷை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து மஞ்சுளா, மோனிஷ் (24), கூலிப்படையினரான ஒசூா் அலசநத்தம் பிஸ்மில்லா நகரைச் சோ்ந்த முகமது ரிகான் (21), தோட்டகிரி முஜாமில் (21), பழைய மத்திகிரி முஸ்ரப் (24), அவரது தம்பி சமீா் (21), அபி என்கிற சதீஷ்குமாா் (19) ஆகிய 7 பேரையும் அட்கோ போலீஸாா் வெள்ளிக்கிழமை கா்நாடக மாநிலத்தில் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், 4 மோட்டாா்சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் கைப்பற்றினா். தொடா்ந்து, அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடந்தி வருகின்றனா்.
