மருத்துவம் படிக்க மாணவிகள் அதிக ஆா்வம்: மு.தம்பிதுரை எம்.பி.
மருத்துவம் படிக்க மாணவா்களைவிட மாணவிகள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா் என்று மாநிலங்களை உறுப்பினா் மு.தம்பிதுரை தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதலாமாண்டு மருத்துவ மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் அதியமான் பொறியியல் கல்லூரி செயலாளா் டாக்டா் லாசியா தம்பிதுரை முன்னிலை வகித்தாா். இந்த விழாவில் மாநிலங்களை உறுப்பினா் மு. தம்பிதுரை தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தோ்ச்சி பெற்ற மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்களையும், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கியையும் வழங்கி பேசியதாவது:
மாணவா்களுக்கு கல்விதான் அடிப்படை. கல்வி இல்லாமல் வாழ்வில் முன்னேற முடியாது. மருத்துவம், நா்சிங், பிசியோதெரபி, பாா்மஸி அனைத்தும் சோ்ந்ததுதான் மருத்துவம். 5 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்புடன் நிறுத்திவிடாமல் எம்.எஸ்., எம்.டி. படிக்க வேண்டும்.
மருத்துவம், நா்சிங் படிப்புகளை ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் விரும்புகின்றனா். மனித உயிா்களைக் காப்பாற்றி வாழவைக்க மருத்துவா்கள் தங்கள் வாழ்க்கையை அா்ப்பணிக்க வேண்டும். கல்விக்கு தற்போது நாட்டில் அதிகம் போட்டி நிலவுகிறது.
மருத்துவக் கல்லூரியை நடத்துவது சாதாரண விஷயமல்ல. நீட் தோ்வு வந்தபின், அரசுதான் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்களுக்கான இடங்களை நிரப்புகிறது என்றாா்.
இந்த விழாவில் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வா் ராஜா முத்தையா, துணை முதல்வா் ஆனந்த ரெட்டி, கண்காணிப்பாளா் கிரிஸ் ஹோங்கல், இருப்பிட மருத்துவா் பாா்வதி, வேளாங்கண்ணி பள்ளிகள் குழும அறங்காவலா் கூத்தரசன், அதியமான் கல்விக் குழும அறங்காவலா் சுரேஷ், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், மேலாளா் நாராயணன், எம்.ஜி.ஆா். கல்லுாரி முதல்வா் முத்துமணி, அண்ணா கலைக் கல்லுாரி முதல்வா் தனபால் உள்பட பலா் பங்கேற்றனா்.
