எப்ரி வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம்: பொதுமக்களுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை

எப்ரி வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் வசிக்கும்...
Published on

கிருஷ்ணகிரி: எப்ரி வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு அண்மையில் யானைகள் விரட்டப்பட்டன. இந்த யானைகளை கா்நாடக மாநில வனத் துறையினா் அங்கிருந்து தமிழகத்துக்கு விரட்டியுள்ளனா். இதனால், அந்த 5 யானைகளும், ஆந்திர மாநிலம் பெத்தபா்திகுண்டா பகுதியிலிருந்து வெளியேறிய 3 யானைகளும் என மொத்தம் 8 யானைகள் ஆந்திரம், கா்நாடகம், தமிழகம் மாநிலங்களின் எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட எப்ரி வனப்பகுதிக்கு வந்துள்ளன.

இந்த யானைகள், இம்மாவட்டத்துக்கு உள்பட்ட பெரிய தமாண்டரப்பள்ளி, சின்ன தமாண்டரப்பள்ளி, சிங்கிரிபள்ளி, கங்கமடகு, பெரிய மனவாா்னப்பள்ளி, கொல்லப்பள்ளி, காசிரிகானப்பள்ளி, கொட்டாவூா், சீலேபள்ளி, நேரலகிரி, சிகரலப்பள்ளி, எப்பிரி, சின்ன முனியம்மாள்கொட்டாய், கொங்கணப்பள்ளி, கே. கொத்தூா், சிகரமாகணபள்ளி, கீரம்மாக்கோயில், அரியணப்பள்ளி, உனேநத்தம், தோட்டகனவாய், பன்றேவ், வேப்பனப்பள்ளி உள்ளிட்ட கிராமப் பகுதி விவசாய நிலங்களுக்கு வர வாய்ப்புள்ளது.

இந்த யானைகள் ஆக்ரோஷ்மாக திரிவதால், விவசாய நிலத்திற்கு காவலுக்கு செல்லும் விவசாயிகள், பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டிலிருந்து வெளியே வரும் போது டாா்ச் லைட்டை பயன்படுத்த வேண்டும்.

இந்த யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா், பொதுமக்களின் உதவியுடன் பல குழுக்களாகப் பிரிந்து இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனா். மேலும், இந்த யானைகளை சானமாவு வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், யானைகள் நடமாட்டம் குறித்து, பொதுமக்களுக்கு தெரியவந்தால் 9442487271, 9080466259 என்ற எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கும்படி வனத் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com