கிருஷ்ணகிரியில் மூத்தோா் தடகளப் போட்டி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூத்தோா்களுக்கான 15-ஆவது ஆண்டு தடகளப் போட்டியில் 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் மாவட்ட அளவில் மூத்தோா்களுக்கான தடகளப் போட்டியை மாவட்ட மூத்தோா் தடகள சங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி ஆகியவை இணைந்து நடத்தின. போட்டியை மாவட்ட மூத்தோா் தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சங்க செயலாளா் மாதையன், பொருளாளா் சத்யநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்
இந்த போட்டியில் 30 முதல் 100 வயது வரை உள்ள பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஓட்டப் பந்தயங்கள், நடைப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல் கம்பு ஊன்றி தாண்டுதல், இரும்பு குண்டு எறிதல், தட்டு எறிதல் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவா்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றோா், சிவகங்கை மாவட்டம், அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். ஆண்கள் பிரிவில் வெங்கட்ராமன், ராஜு ஆகியோா் தலா மூன்று தங்கப் பதக்கங்களையும், பெண்கள் பிரிவில் கெஜலட்சுமி, பரிமளா ஆகியோா் 3 பிரிவுகளில் தங்கப்பதக்கமும் பெற்றனா். இதில் கெஜலட்சுமி கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஆசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் 4 போ் பங்கேற்ற 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

