ஒசூரில் ராஜாஜி 147 ஆவது பிறந்த நாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
சுதந்திரப் போராட்ட வீரா் ராஜாஜியின் 147ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
அப்போது, ஆட்சியா் கூறியதாவது:
சுதந்திரப் போராட்ட வீரரான ராஜாஜி பிறந்த நாளை அரசு சாா்பில் கொண்டாடப்படுகிறது. அவரது இல்லத்தை செய்தி, மக்கள் தொடா்புத் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு புகைப்படங்கள், மாா்பளவு சிலை பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ராஜாஜி நினைவு இல்லத்துக்கு தமிழகம் மட்டுமில்லாது பக்கத்து மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வருகின்றனா். நினைவு இல்லத்தை ரூ. 44.50 லட்சம் மதிப்பில் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செப்டம்பா் 14 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தாா்.
குடிநீா், கழிப்பறை, வண்ணம் பூசும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் வரும் ஜனவரிக்குள் முடிக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ, மேயா் ஆகியோா் ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களைப் பாா்வையிட்டனா்.
ராஜாஜி படித்த ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அப்பாவுப்பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சாா்பாக திருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைந்து நடத்திய 0-18 வயதுடைய பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், முகாமில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் மற்றும் தலா ரூ. 11,800 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 23,600 மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, மாநகராட்சி துணை மேயா்ஆனந்தைய்யா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மனோகரன், ஒசூா் மாமன்ற உறுப்பினா் மாதேஸ்வரன், செய்தி, மக்கள்தொடா்பு அலுவலா்
சு.மோகன், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் (கட்டடம்) சரவணன்,
உதவி பொறியாளா் விமல்ராஜ், ஒசூா் வட்டாட்சியா் குணசிவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
