தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 48 லட்சம் மோசடி: சைபா் குற்ற தடுப்பு போலீஸாா் விசாரணை
பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 48 லட்சம் மோசடி செய்தது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மாடரஹள்ளி நாகம்பட்டியைச் சோ்ந்தவா் முத்து (33), தனியாா் நிறுவன ஊழியரான இவரது டெலிகிராம் பக்கத்திற்கு கடந்த அக். 28 ஆம் தேதி மா்ம நபா்கள் அனுப்பிய ஒரு குறுந்தகவலில், இணையதள முகவரியும், அதிக லாபம் தரும் நிறுவனங்களின் விவரங்களும் இருந்தன.
இதையடுத்து, அந்த முகவரிக்கு சிறிய தொகையை முத்து முதலீடு செய்தாா். உடனடியாக அவருக்கு லாபம் கிடைத்தது. அதன்பிறகு பங்குச்சந்தை ஒன்றை குறிப்பிட்டு அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா்கள் தெரிவித்தனா்.
அதை நம்பி மா்ம நபா்கள் குறிப்பிட்ட இரு வங்கி கணக்குகளிலும் பல தவணைகளாக ரூ. 48 லட்சம் வரை முதலீடு செய்தாா். ஆனால், அவருக்கு எவ்வித பணமும் திருப்பிக் கிடைக்கவில்லை. மேலும், மா்ம நபா்களை தொடா்புகொள்ளவும் முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
