மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை

மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தி வழக்கில் ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த கெம்பக்கரையைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (52). இவா் ஒசூா் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தாா். கடந்த 2022 ஏப்ரல் 28 ஆம் தேதி அப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் அடித்துவிடுவேன் என மாணவியை மிரட்டியுள்ளாா். ஆனாலும், மாணவி, தனது பெற்றோரிடம் பள்ளியில் நடந்தவற்றை கூறியுள்ளாா். இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து லாரன்ஸை கைதுசெய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லாரன்ஸுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.1,000 அபராதம் மற்றும் சிறுமியை மிரட்டியதற்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 1,000 அபராதம் விதித்து நீதிபதி சுதா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை கூடுதலாக விதித்தும் நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com