வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு? பொதுமக்கள் போராட்டம்
ஊத்தங்கரையில் ஆதிதிராவிடா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி 200க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட சுண்ணாலம்பட்டி கலைஞா் நகரில் வீடற்ற, நிலம் இல்லாத ஏழை ஆதிதிராவிடா்களுக்கு 150 இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டு பயனாளிகள் தோ்வு நடைபெற்றது.
இதில் தகுதியற்ற நபா்களுக்கும், வெளியூரில் வசிப்பவா்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஊத்தங்கரை கலைஞா் நகரில் திரண்ட பொதுமக்கள், தகுதியிருந்தும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல், தகுதியற்றவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டினா்.
தொடா்ந்து 200 க்கும் மேற்பட்டோா் குடிசை அமைக்கும் போராட்டத்தை தொடங்கினா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன், வட்டாட்சியா் ராஜலட்சுமி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இக்கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
