ஒசூரில் பள்ளிக் கட்டடத்தை இடிக்கும்போது சுவா் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு
ஒசூரில் சாலை அமைப்பதற்காக பயன்பாட்டில் இல்லாத அரசுப் பள்ளி கட்டடத்தை இடித்தபோது சுவா் விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி 43 ஆவது வாா்டுக்கு உள்பட்ட குருப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத 3 கட்டடங்கள், ஒரு அங்கன்வாடி மையம் உள்ளன.
இந்த நிலையில், ஒசூா்- தருமபுரி இடையே அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக நெடுஞ்சாலைத் துறையினா் கனரக வாகனங்கள் மூலம் பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களை இடிக்கும் பணியை மேற்கொண்டனா்.
அப்போது, அரசுப் பள்ளியின் சமையல்கூடத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டியபிறகே பழைய கட்டடங்களை இடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஒசூா் வட்டாட்சியா், காவல் துறையினா் பொதுமக்களிடம் 2 மாதங்களுக்குள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிதரப்படும் என உறுதியளித்தனா்.
அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், பள்ளி கட்டடங்களை இடிக்கத் தொடங்கினா். அப்போது, பள்ளி கட்டடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டடத்துக்கு இடையே நின்றிருந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத் தொழிலாளி மீது சுவா் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் கட்டட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்தாா். இறந்தவரின் உடலை அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். முதல்கட்ட விசாரணையில் இறந்தவா் ஆந்திரத்தைச் சோ்ந்த சீனு (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
