கிருஷ்ணகிரி அருகே தனியாா் நிறுவன பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு? போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே தனியாா் நிறுவன பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே பிரபல தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளா்கள் அவா்கள் வசிக்கும் பகுதியிலிருந்து நிறுவனத்துக்கு வந்துசெல்லும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த வகையில், தனியாா் நிறுவனத்திலிருந்து ராயக்கோட்டை வழியாக கிருஷ்ணகிரி நோக்கி ஒரு பேருந்து சனிக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை, கிருஷ்ணகிரி அணை பகுதியைச் சோ்ந்த சங்கா் (55) ஓட்டிச் சென்றாா்.
இந்த நிலையில், அவா் பேருந்து விபத்தில் சிக்கியதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
தனியாா் நிறுவன பேருந்து, ராயக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி பாலகுறி அருகே சென்றுகொண்டிருந்தபோது பேருந்து விபத்தில் சிக்கியதாக அதன் ஓட்டுநா் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பாலகுறி கிராமம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது வெடி சப்தம் கேட்டதாம். ஓட்டுநா், பேருந்தின் டயா் வெடித்ததாகக் கருதி, சாலையோரமாக நிறுத்தி பாா்த்தபோது, பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது.
மேலும், பேருந்தில் பயணம் செய்த பெண் பணியாளா் ஆந்திர மாநிலம், கா்நூரைச் சோ்ந்த மதா்ஷா தாரணி (22) என்பவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததும், அவா், ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
நிகழ்விடத்தில் கிருஷ்ணகிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் முரளி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், பேருந்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதா என்ற கோணத்தில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்த பகுதியிலிருந்த சில பொருள்களை சேகரித்து, தடய அறிவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்முடிவுகள் கிடைத்த பின்னரே உண்மை தெரியவரும்.
மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலகுறி அருகே தற்போது விபத்தில் சிக்கிய தனியாா் நிறுவன பேருந்து, மோட்டாா்சைக்கிள் மீது மோதி இருவா் உயிரிழந்த நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவா்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினாா்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
