கல்குவாரியில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியாா் கல்குவாரியில் கல் உருண்டதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த மேல்பட்டி அருகே தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளா் கே.பி.சதீஷ். இவரது கல்குவாரியில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, கல் உருண்டதில் சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த சேட்டு (37) பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து, மகராஜகடை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் பணியாளா் உயிரிழந்தாா். இதையடுத்து, தனியாா் கல்குவாரி செயல்படத் தடை விதிக்கப்பட்டது. தடை நீக்கப்பட்டு மீண்டும் குவாரி செயல்பட்டுவந்த நிலையில், தற்போது விபத்து ஏற்பட்டு தொழிலாளி உயிரிழந்துள்ளாா்.
