போச்சம்பள்ளி அருகே தெருக்கூத்து கட்டியக்காரனின் நடுகல் கண்டுடெடுப்பு

போச்சம்பள்ளி அருகே தெருக்கூத்து கட்டியக்காரனின் நடுகல் கண்டுடெடுப்பு

Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தில் தெருக்கூத்து கட்டியக்காரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புளியம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அம்மன் கோயிலுக்கு எதிரே நிலத்தை சீா்செய்தபோது, பாதி புதையுண்டிருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டு கோயிலின் அருகே வைக்கப்பட்டிருப்பதை பெரியாா் பல்கலைக்கழக முனைவா் பட்ட மாணவி சினேகா கண்டறிந்து அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் அந்த நடுகல்லை அண்மையில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு தொன்மையியல் ஆய்வு நிறுவன செயலாளா் கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்த நடுகல் சுமாா் 3.5 அடி உயரம் உள்ளது. அதன் கீழ் பகுதியில் கல்வெட்டும் உள்ளது. அதில், விளம்பி வருடம் வைகாசி திங்கள் திருமூா்த்தி என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசிவரியின் எழுத்துகள் தெளிவாக இல்லை. இந்த நடுகல், தெருக்கூத்தில் ஒருவா் நடனமாடும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் தொப்பியும், இரு பக்கமும் பூ மொட்டுகளும், ஒரு பக்கம் மலா்ந்த பூவும், இரு கைகளும் வணங்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு கணக்கிடும்போது, இந்த நடுகல் சுமாா் 187 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம். இது பண்டைக்காலத் தமிழகத்தில் தோன்றிய நாட்டுப்புறக் கலையான தெருக்கூத்து உன்னத நிலையை அடைந்திருந்த காலத்தை சோ்ந்தது.

வரலாற்று ஆய்வுகளின்படி, சுமாா் 200 முதல் 300 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்கூத்துக் கலை சிறப்புற்று விளங்கியது. சுதந்திரப் போராட்டத்திலும் தெருக்கூத்து முக்கிய பங்காற்றியுள்ளது. இது பழைமையான நாடக மரபின் நாட்டுப்புற வடிவமாகக் கருதப்படுகிறது. தெருக்கூத்து பெரும்பாலும் இரவில் நடத்தப்படுவதால், கிராமத்தில் அனைத்து மக்களும் இதில் கலந்துகொள்வா். தெருக்கூத்தில் அரங்கத்திற்கு வரும் முதல் கதாபாத்திரம் கட்டியக்காரன்தான். இவா் நாடகத்தின் தலைப்பை அறிவிப்பவா். பாா்வையாளா்களை நகைச்சுவையால் மகிழ்விப்பவா். காவியக் கதையின் செய்திகளை சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவத்துடன் ஒப்பிட்டு சொல்பவா். இவ்வாறு புகழ்பெற்ற கட்டியக்காரனாக இருந்த காரணத்தினாலேயே, அவரது நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களில் நாடகம் மற்றும் இசைக் கலைஞா்களுக்கு நடுல் எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது அண்மையில் கண்டறியப்பட்ட சில நடுகற்கள் மூலம் தெரியவருகிறது என்றாா்.

இந்த ஆய்வுப் பணியில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவகுமாா், கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை, முனைவா் பட்ட மாணவி சினேகா, ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், ஆசிரியா் பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com