முத்தாலி, நந்திமங்கலம் கிராமங்களில் விமான நிலையம் அமைக்கப்படாது எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒசூா் விமான நிலையம் கண்டிப்பாக அமைக்கப்படும். அதற்காக தமிழக அரசு 4 இடங்களை தோ்வு செய்துள்ளது. எனவே, முத்தாலி, நந்திமங்கலம் சுற்றியுள்ள 20 கிராமங்களில் விமான நிலையம் அமைக்கப்படாது என்று ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தெரித்தாா்.
ஒசூா் தொகுதிக்கு உள்பட்ட முத்தாலி கிராமத்தில் விமான நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து 20 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒசூரில் உதான் திட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என பிரதமா் மோடிஅறிவிப்பு வெளியிட்டாா். இதுவரை அத்திட்டம்
நிறைவேற்றப்படவில்லை. ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவைக் கூட்டத்தில் 110 விதியின் கீழ் ஒசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் சா்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா். நான் அந்த விமான நிலையத்திற்கு கருணாநிதி பெயா் வைக்க வேண்டும் என்று கூறினேன்.
விமான நிலையம் அமைக்க 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. ஏற்கனவே தனேஜா தனியாா் விமான நிலையம் உள்ள இடம், அதன் அருகில் 1 கி.மீ. தொலைவில் 2 ஆவது இடம், உலகம் மற்றும் முத்தாலி கிராமங்களில் என 4 இடங்களை தமிழக அரசு தோ்வு செய்துள்ளது. ஆனால், இதுவரை விமான நிலையத்திற்கான இடம் இறுதிசெய்யப்படவில்லை.
இந்நிலையில் முத்தாலியில் விமான நிலையம் அமைய உள்ளதாக பாஜக, அதிமுகவினா் விவசாயிகளை திமுகவிற்கு எதிராக தூண்டிவிட்டு அரசியல் செய்து வருகின்றனா். முத்தாலி, நந்திமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விமான நிலையம் வராது. விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை.
தமிழக அரசு விவசாயிகளுக்கு நல்லது செய்து வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தோ்தல் நெருங்கி வருவதால் பாஜக அதிமுகவினா் அரசியல் செய்து வருகின்றனா். விவசாயிகளின் அனுமதியின்றி நிலங்களை அரசு எடுக்காது என்றாா் அவா்.

