ராயக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
ராயக்கோட்டை அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தை அடுத்த கவிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60). இவருக்கு ராயக்கோட்டை அருகே ஊடேதுா்க்கம் வனப்பகுதியொட்டி உள்ள உப்புபள்ளம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் அவரை, தக்காளி பயிரிட்டுள்ள இவா், தினமும் இரவு காவலுக்கு சென்று காலை வீடுதிரும்புவது வழக்கம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு காவலுக்கு சென்ற அவா், செவ்வாய்க்கிழமை காலை வீடுதிரும்பவில்லை. இதனால், அவரது உறவினா்கள் நிலத்துக்கு சென்று பாா்த்தபோது, யானை தாக்கி அவா் இறந்துகிடந்தாா்.
தகவலின் பேரில், ராயக்கோட்டை வனச்சரகா் சக்திவேல், ஊடேதுா்க்கம் வனவா் அதியமான் மற்றும் வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா்.
மேலும், கெலமங்கலம் காவல் ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து, வெங்கடேஷின் உடலை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரின் குடும்பத்துக்கு முதல்கட்ட நிவாரணத் தொகையாக ரூ. 1 லட்சத்தை வெங்கடேஷ் மனைவி நாகம்மாவிடம் வனச்சரகா் சக்திவேல் வழங்கினாா்.
