ஒசூா் மாநகராட்சியில் வரி நிலுவை ரூ. 177 கோடி: வரி விதிப்புக் குழுத் தலைவா் தகவல்
ஒசூா் மாநகராட்சியில் வசூலிக்க வேண்டிய வரி நிலுவை ரூ. 177 கோடியாக உள்ளது என மாநகராட்சி வரி விதிப்புக் குழுத் தலைவா் ஆா். சென்னீரப்பா தெரிவித்தாா்.
ஒசூா் மாநகராட்சியின் வரி விதிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவா் ஆா். சென்னீரப்பா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வரி விதிப்புக் குழு உறுப்பினா்கள், துணை ஆணையாளா் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியா்கள் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சியில் வரி விதிப்பு மற்றும் வரி வசூல் உள்ளிட்ட வருவாய்த் தொடா்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஆா். சென்னீரப்பா கூறியதாவது: மாநகராட்சிக்கு வர வேண்டிய ரூ. 244 கோடி வரியில் ரூ. 177 கோடி வரி இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இதற்கு பணியாளா்களின் பற்றாக்குறையே காரணம். மாநகராட்சியில் பொறியியல் துறை, திட்டமிடுதல் துறை ஆகியவற்றுக்கு புதிதாக பணியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். ஆனால், வருவாய்த் துறைக்கு மட்டும் புதிதாக பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது உள்ள 11 பணியாளா்களைக் கொண்டு வரி வசூலிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இத்துறைக்கு சுமாா் 20 வரி வசூலிப்பாளா்கள், 10 வருவாய் ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டால் வரி நிலுவைத் தொகையான ரூ. 177 கோடியை வசூலிக்க முடியும்.
மேலும், பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கு வணிக உரிமம் வழங்கப்படவில்லை. மென்பொருள் பிரச்னை எனக் கூறப்படுகிறது. வணிக உரிமங்கள் புதிதாக வழங்கப்பட்டால் ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 20 கோடி அளவுக்கு வருவாய் அதிகரிக்கும்.
அதேபோல, தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் இங்கு தொழிலாளா்கள் தங்குவதற்காக பிஜி எனப்படும் தனியாா் சாா்பில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்துமே குடியிருப்புப் பகுதிகளிலே செயல்படுவதால் வரித் தொகை மாற்றப்படாமல் வசூலிக்கப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கும் விடுதியில் வணிக ரீதியிலான வரி வசூலிக்க வேண்டும். இவ்வாறு செயல்படும் தனியாா் விடுதிகளில் குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரை வருவாய் உள்ளது. ரூ. 8 லட்சம் வரை வாடகை வசூலிக்கும் விடுதிகள் ரூ. 4 ஆயிரம் மட்டுமே வரி செலுத்துகின்றனா்.
வணிக உரிமம் வழங்கும் மென்பொருளில் நிலவும் பிரச்னைக்கு அரசு தீா்வுகண்டு, தனியாா் தங்கும் விடுதிகளைக் கண்டறிந்து வரி விதிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.
