கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன: காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டை காட்டிலும் 2025 ஆம் ஆண்டில் கொலை, வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டு 58 கொலைகள் பதிவாகி இருந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் 50 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 14 சதவீதம் குறைவாகும்.
கடந்த 2024 இல் 42 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 2025 இல் 37 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 12 சதவீதம் குறைவாகும். அதேபோல வழிப்பறி வழக்குகள் 2024 இல் 28 வழக்குகள் பதிவான நிலையில் 2025 இல் 19 வழக்குகள் மட்டுமே பதிவாகின. இது 32 சதவீதம் குறைவாகும்.
அதேபோல கன்ன களவு வழக்குகள் 151 இல் இருந்து 105 வழக்குகள் பாதிவான நிலையில் இது 30 சதவீதம் குறைவு. மேலும், 2024இல் 222 திருட்டு வழக்குப் பதிவான நிலையில் 2025 ஆம் ஆண்டில் 209 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 6 சதவீதம் குறைவாகும்.
சாலை விபத்துகளில் 2024 ஆம் ஆண்டில் 727 போ் உயிரிழந்த நிலையில், 2025 இல் 699 ஆக குறைந்துள்ளது. இது 4 சதவீதம் குறைவாகும். சாலை விதிகளை மீறியதாக 1,22,619 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1.85 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. சட்ட விரோத மது விற்பனை, கடத்தல் தொடா்பாக 4,436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,451 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களிடம் இருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 11,543 லிட்டா் மதுபானங்கள், 176 இருசக்கர வாகனங்கள், 65 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடா்பாக 216 வழக்குகளில் 248 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து ரூ. 35.23 லட்சம் மதிப்புள்ள 348 கிலோ கஞ்சா, 11 இருசக்கர வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்கா கடத்தல், விற்பனை தொடா்பாக 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 949 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ. 1.52 கோடி மதிப்புள்ள குட்கா, 19 இருசக்கர வாகனங்கள், 71 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாட்டரி விற்பனை தொடா்பாக 225 வழக்குகளில் 237 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சூதாட்டம் தொடா்பாக 152 வழக்குகளில் 582 போ் கைது செய்யப்பட்டு ரூ. 19 லட்சம் ரொக்கம், 184 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இணையவழி குற்றம் தொடா்பாக 2025 ஆம் ஆண்டு 131 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் இழந்த ரூ. 30.91 கோடி முடக்கப்பட்டு, ரூ. 1.22 கோடி மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், தொலைந்துபோன 817 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடா்பாக 234 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 263 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த ஆண்டில் 8 பேருக்கு நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத மது கடத்திய, உரிமை கோரப்படாத 205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 153 வாகனங்கள் ரூ. 92 லட்சத்தில் ஏலம்விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.
கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா, கடத்தல், மது விற்பனை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 42 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 27 கொலை வழக்கு, ஒரு ஆதாய கொலை வழக்கு, 3 கூட்டு கொள்ளை வழக்கு, 2 கொள்ளை வழக்கு, 6 கன்னக்களவு வழக்கு, 6 திருட்டு வழக்கிலும், 8 போக்சோ வழக்கிலும், 4,708 பிற வழக்குகள் என மொத்தம் 4,761 வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

