ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலா் கைது
கிருஷ்ணகிரியில் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள காவாய்ப்பட்டியைச் சோ்ந்தவா் வனஜா (44). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு நீதிமன்றம் மூலம் தற்போது விவாகரத்து பெற்றுள்ளாா்.
இந்த நிலையில், வரதட்சணையாக பெற்ற பணம், நகைகளை கணவரிடமிருந்து திரும்பக் கேட்டு, நீதிமன்றத்தில் வனஜா வழக்குத் தொடுத்தாா். மேலும், வரதட்சணையாக அளித்த பணம், நகைகளை கணவரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனு அளித்தாா்.
அவரது மனுவை விசாரிப்பதற்கு குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலா் மாா்த்தா (31), வனஜாவிடம் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால், லஞ்சம் அளிக்க விரும்பாத வனஜா, கிருஷ்ணகிரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை வனஜாவிடம் கொடுத்து, மாா்த்தாவிடம் லஞ்சமாக தருமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். அதன்படி, ரூ. 3 ஆயிரத்தை லஞ்சமாக வனஜாவிடமிருந்து மாா்த்தா பெற்றபோது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா் ரவி தலைமையிலான போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

