~

ஒசூா் ஸ்ரீ அழகன்முருகன் மலைக்கோயில் குடமுழுக்கு

Published on

ஒசூா்: ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பதி மெஜஸ்டிக் குடியிருப்பு பகுதியில் குன்றின்மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகன்முருகன் மலைக்கோயில் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரில் வேறு எங்கும் இல்லாத வகையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூா்த்திகளும் 3 மலைகளில் ஒரே நோ்க்கோட்டில் அமைந்து காட்சிளிக்கின்றனா். அதற்கு இணையாக தற்போது மலைமீது வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ அழகன்முருகன் காட்சியளிக்கிறாா்.

இத்திருக்கோயிலுக்கான புதிய விமானம் மற்றும் கோபுரங்கள் கட்டும் திருப்பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. தொடா்ந்து, மகா குடமுழுக்கு திருவிழாவையொட்டி, கடந்த மாதம் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கான பிரம்மாண்ட மகா யாகசாலைகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதில், புனிதநீா் அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு அா்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான கோபுர விமான கலசத்துக்கு அஷ்டபந்தன மகா குடமுழுக்கு திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீா் அடங்கிய கலசங்கள் கோபுர விமானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னா் புனிதநீா் கோபுர விமானக் கலசத்தின் மீது ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடா்ந்து, மூலவா் ஸ்ரீ அழகன்முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

அப்போது, ஆயிரக்கணக்கான பக்தா்கள் ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ போன்ற முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, அன்னதானம், தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் ஒசூா் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com