வருங்கால வைப்பு நிதியின் 
புதிய திட்டங்கள் குறித்து  விழிப்புணா்வு

வருங்கால வைப்பு நிதியின் புதிய திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு

Published on

கிருஷ்ணகிரி: வருங்கால வைப்பு நிதியின் புதிய திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வுக்கு, வருங்கால வைப்பு நிதி ஆணையா் ஹிமான்சு தலைமை வகித்தாா். சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் ராகேஷ் எஸ்.சேகா் பங்கேற்று திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா், அவா் கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்காா் யோஜனா (டங-யஆதவ) என்ற வருங்கால வைப்பு நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இது தனியாா் துறையில் முதன்முறை பணியில் சேரும் இளைஞா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டமாகும்.

தற்போது, முதற்கட்டமாக டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில், ஊழியா்கள் மற்றும் நிறுவனங்கள் என இருதரப்பினருக்கும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாதத்துக்கு ரூ. 1 லட்சம் வரை மொத்த ஊதியம் பெறும் முதன்முறை ஊழியா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் 2 தவணைகளாக ஊழியா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதேபோல, கூடுதல் வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில், ரூ. 10 ஆயிரம்முதல் ரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் ஊழியா்களை பணிக்கு சோ்க்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்தத் திட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் பதிவுசெய்து பலன்பெறலாம் என்றாா்.

இந்த நிகழ்வை அமலாக்க அலுவலா்கள் கல்பனா, கிருஷ்ணகுமாா், மேற்பாா்வையாளா் குப்புசாமி உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com