டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விடுதி முன் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்கள்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விடுதி முன் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளா்கள்.

ஒசூரில் டாடா நிறுவன மகளிா் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா: ஒடிசா மாநில பெண் கைது

Published on

ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமராவை வைத்து விடியோ எடுத்த ஒடிசா மாநில பெண்ணை உத்தனப்பள்ளி போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா். இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காத நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை இரவு 6 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் விடுதி முன்பாக போராட்டம் நடத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சுமாா் 20 ஆயிரம் பெண்கள் பணியாற்றுகின்றனா். இவா்களில் 6500 போ் பிகாா், ஒடிசா, ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம் போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து நிறுவனத்தின் விடுதியில் தங்கிப் பணியாற்றி வருகின்றனா்.

இந்த பெண் தொழிலாளா்கள் விடுதியின் ஓா் அறையில் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த 4 பெண்கள் தங்கியுள்ளனா். இவா்களில் ஒருவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்ததை, அந்த அறையில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த நீலுகுமாரி குப்தா (23) என்ற மற்றொரு பெண், ரகசிய கேமராவை வைத்து விடியோ எடுத்துள்ளாா்.

விடியோ எடுத்ததை அறிந்த பெண், டாடா நிா்வாகத்திற்கும், விடுதியின் வாா்டனுக்கும் புகாா் தெரிவித்துள்ளாா். ஆனால், செவ்வாய்க்கிழமை இரவுவரை இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மகளிா் விடுதி முன்பாக விடுதியில் தங்கியிருந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். 500-க்கும் அதிகமான பெண்கள் ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இந்த நிலையில், விடியோ எடுத்த நீலுகுமாரி குப்தாவை உத்தனப்பள்ளி போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா். அவா், தனது ஆண் நண்பருக்கு விடியோவை பகிா்ந்த நிலையில், அது சமூக வலைதளத்தில் பரவியதன் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸாரின் விசாரணையில், நீலுகுமாரியின் ஆண் நண்பா் சந்தோஷ் (எ) சதீஷ்குமாா், பெங்களூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரை கைதுசெய்ய கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீஸாா் பெங்களூரு சென்றுள்ளனா்.

6 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, கூடுதல் கண்காணிப்பாளா் சங்கா் தலைமையில் 500-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், பெண் தொழிலாளா்களின் அறைகளை, பெண் போலீஸாா் 10 போ் கொண்ட 10 குழுவினா் ஒவ்வொரு அறையாக மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை நடத்தினா். அதோடு, தில்லியில் இருந்து மற்றொரு துப்பறியும் குழுவினா் ஒசூா் வருவதாகவும், அவா்களும் அறைகளில் சோதனை செய்ய உள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com