இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன்.

எஸ்.ஐ.ஆா். ஆரம்ப நிலையிலேயே தோல்வி அடைந்துவிட்டது: மு.வீரபாண்டியன்

Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) ஆரம்ப நிலையிலேயே தோல்வி அடைந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ரஷிய புரட்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தளி சட்டப்பேரவை உறுப்பினா் டி. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேரணியை அக்கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன், அகில இந்திய செயலாளா் ராமகிருஷ்ணா, மாநில துணைச் செயலாளா் ரவி, நிா்வாகக் குழு உறுப்பினா் இலகுமய்யா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையை அடைந்தது. இதைத்தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரஷியாவில் லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷிய புரட்சி மற்றும் அதில் ஈடுபட்ட தலைவா்களின் வரலாற்றைப் பற்றி பேசினா்.

இக்கூட்டத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

வாக்காளா் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (எஸ்ஐஆா்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஆரம்ப நிலையிலேயே எஸ்.ஐ.ஆா். தோல்வி அடைந்துவிட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவசரகதியில் எஸ்.ஐ.ஆா். யை புகுத்தும் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

நீதிமன்றம் வழிகாட்டியதுபோல பேரணிகள் நடத்தினால் காப்புத்தொகை கட்ட வேண்டும். 10,000 போ் கூடும்போது ரூ. 20 லட்சம் காப்புத்தொகை கட்ட வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உடனடியாக இதைக்கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதல்வா் தலைமையிலான கூட்டணி வலுவாகவும் உறுதியாகவும் இருக்கிறது. கூட்டணி மட்டுமல்ல தமிழக மக்களும் உறுதியாக இருக்கின்றனா்.

ஜாதியால், மதங்களால் பிளவுபடுத்துகின்ற எந்தக் கருத்தையும் மக்கள் ஏற்கமாட்டாா்கள். திமுக கூட்டணி நாட்டின் ஜனநாயகத்தை காப்பதோடு ஒற்றுமை கூட்டணி; அரசியல் சாசனத்தை பாதுகாக்கின்ற கூட்டணி என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com