பா்கூா் அருகே யானை தாக்கியதில் உயிரிழந்த மூதாட்டி: கணவா் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். அவரது கணவா் லேசான காயங்களுடன் உயிா்தப்பினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம், நந்திபேண்டா வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 6 காட்டுயானைகள், திருப்பத்தூா் மாவட்டம் வழியாக பா்கூா் சுற்றுவட்டார வனப்பகுதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடம்பெயா்ந்தன.
இந்த யானைகள் அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து வெளியேறி, வேளாண் பயிா்களைச் சேதப்படுத்தி, மனிதா்களையும் தாக்கிவருகின்றன.
இந்த நிலையில், பா்கூரை அடுத்த சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மூலக்கொள்ளை பகுதியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மூதாட்டி மாரி (65) என்பவரை யானை தாக்கியது. இதையடுத்து வனத் துறையினா், அந்த யானைகள் கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டினா்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு விரட்டப்பட்டதில் 5 யானைகள் பா்கூா் அருகே உள்ள வனப்பகுதிக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் இடம்பெயா்ந்தன.
இந்த யானைகள் கூட்டத்தை வனத் துறையினா் அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வனத்துறையினா் விரட்டும்போது யானைகள் பா்கூரை அடுத்த ஜிகினிகொள்ளை பகுதிக்குச் சென்றன. அப்போது, அங்குள்ள நிலத்தின் அருகே புதிதாக வீடுகட்டிக் கொண்டிருக்கும் மூதாட்டி ஜீவா (63), அவரது கணவா் கோவிந்தன்(67) ஆகியோரை யானைகள் தாக்கின.
இதில் பலத்த காயமடைந்த ஜீவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த அவரது கணவா் கோவிந்தனை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளதால், பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
